வங்கிக் கடன் தொகை வசூலில் மோசடி: கலெக்டரிடம் சுயஉதவிக்குழுவினர் மனு

பரமத்திவேலூர் அருகே, வசூலித்த தொகையை, வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த, வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டரிடம் மகளிர் குழுவினர் மனு அளித்தனர்.

Update: 2022-01-25 01:30 GMT

மகளிர் குழுவினரிடம் வசூல் செய்த கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்தவர்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,  மனு அளித்தவர்கள்.

இது குறித்து,  நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வேலூர் அருகே உள்ள, வாழவந்தியில்,  கிராம வங்கி உள்ளது. இந்த வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை அணுகி ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வங்கிக் கடன் வழங்குவதாக தெரிவித்தனர். அந்தக் கடன் தொகையை தவணை முறையில் திருப்பிச் செலுத்தினாலும் போதும் எனவும் கூறினர்.

அதன்பேரில் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிக் கடன் பெற்றோம். வங்கி பணியாளரிடம் தவணையை முறையாக திருப்பிச் செலுத்தி வந்தோம். அதற்கான ரசீதும், கடன் வசூலித்த நபர் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சம்மந்தப்பட்ட வங்கி மூலம் கடன் வசூல் தொகை முறையாக வரவு வைக்கப்படவில்லை. எங்களுக்கு கடன் பாக்கி அதிகமாக உள்ளது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பெருந்தொகை பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக திருப்பி செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களிடம் கடன் தவணை தொகையை வசூலித்து அதனை முறையாக வங்கியில் வரவு வைக்காமல் ஏமாற்றியுள்ள வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News