போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.;

Update: 2025-02-06 10:30 GMT

போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து, பஞ்சாயத்து செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், கிராம பஞ்சாயத்து செயலாளர்களுக்கான போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகிது பேசியதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடைசெய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, ஹான்ஸ் புகையிலை, கூல்லிப் உள்ளிட்டவற்றின் பயன்பாடு உள்ளதா என்பதை, அப்பகுதி பஞ்சாயத்து செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும். போதை பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும். வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. பாதுகாப்பான சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு நாம் உருவாக்கி தர வேண்டும். மோகனூர் பகுதியில் வளர்ச்சித்துறையினர் மூலம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதே போல பிற பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணித்து போதை பொருட்களை கைப்பற்றிட வேண்டும். பெட்டிகடைகள், டீ கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரசு அலுலவர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு கிராம அளவில் மறைமுகமாக ஏதேனும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக லாரிகள் மற்றும் டூ வீலர்களில் அண்டை மாநிலங்களிலிருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது எனவும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறை ரூ.25,000, 2ம் முறை 50,000 மற்றும் இறுதியாக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும். தற்போது வரை சுமார் 525 கடைகள் சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனவே, போலீஸ்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

Similar News