பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் : நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-09-01 04:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்ட செயல்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைலமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய மருத்துவ பயிர்கள் திட்டம், கூட்டுப்பண்ணையத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, நாமக்கல் மாவட்டத்திற்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 3,850 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.32 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படவுள்ளது.

மேலும், நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, துணை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தின் கீழ் ஆழ்த்துளை கிணறு, மின்மோட்டார், பைப் லைன் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.6.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார். கூட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர்பாசனம்) சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News