நாமக்கல்லில் இருந்து கோவைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை மனு

நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக கோவைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று ரயில்வே கமிட்டி உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-12 12:45 GMT

நாமக்கல் ரயில்வே நிலையத்திற்கு வந்த ரயில்வே கமிட்டி உறுப்பினர் பொன் பாலகணபதியிடம் விவசாய முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் வருகை தந்த ரயில்வே கமிட்டி உறுப்பினர் பொன் பாலகணபதியிடம், விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், தலைமை நிலைய செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றம் பொதுமக்கள், அடிக்கடி கோயமுத்தூருக்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி கோவைக்கு சென்று வர வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது நாமக்கல்லில் இருந்து கோவை செல்வதற்கு பஸ் வசதி மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே நாமக்கல்லில் இருந்து மோகனூர், கரூர் வழியாக கோயமுத்தூருக்கு காலை 6.30 மணியளவில் ஒரு ரயிலும் மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து நாமக்கல்லுக்கு மாலை 6 மணியளவில் ஒரு ரயிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு ரயில்வே துறையின் மூலம் டிக்கட் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை அளிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒருங்கிணைத்து விவசாய பொருட்களை தங்குதடையின்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தனியாக அதிக அளவில் சரக்கு ரயில் இயக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News