நாமக்கல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயம்
நாமக்கல் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
பைல் படம்.
நாமக்கல் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், அருகில் உள்ள கிராமங்களிலும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இது குறித்து பலரும் அடிக்கடி புகார் எழுப்பி வருகின்றனர். நாமக்கல் மாநகராட்சி கூட்டத்திலும் இக்குற்றச்சாட்டை எழுப்பும் கவுன்சிலர்கள், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள, தொட்டிப்பட்டியில் முருகவேல் என்பவரின் 3 வயது மகள் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உலவிய 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுமியைக் கடித்து குதறியுள்ளது. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்ட முயன்றனர். அவர்களையும் நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.