ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள நாமக்கல்லில் சிறப்பு வார்டு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, தயார் நிலையில் சிறப்பு வார்டுகள் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-06 02:30 GMT

இது குறித்து,  மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை யாரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஒமிக்ரான் நோய்த்தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 30 படுக்கை வசதி கொண்ட 5 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் 200 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில், கடந்த வாரம் கொரோனா நோய்த்தொற்று முற்றிய நிலையில் வந்த முதியோர்களுக்கு இறப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் நம்மிடமிருந்து அகலவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14,64,300 நபர்களில் 11,57,687 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7,98,794 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News