தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு: பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு நிறுத்தம்

கோழித்தீவன மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பண்ணையாளர்கள் புதிய கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

Update: 2021-06-26 04:52 GMT

நாமக்கல் மண்டலத்தில், கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து  தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள்சங்க செயலாளர் சுந்தரராஜ் கூறியுள்ளதாவது:

நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1000 முட்டைக்கோழிப் பண்ணைகள் உள்ளன. சுமார் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம், மற்றும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோயா, கம்பு, கடலை புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்பட கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய ரூ.4 80 காசுகள் செலவாகிறது. முட்டை விலை என்இசிசி ரூ.5 ஆக அறிவித்தாலும், வெளி மார்க்கெட்டில் ரூ.4.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு முட்டைக்கு 30 பைசா நஷ்டம் ஏற்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பால், கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலீட்டு வட்டி, ஆட்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களும் அதிகரித்து வருவதால், ஒரு முட்டை ரூ.5.50க்கு விற்பனை செய்தால்தான் பண்ணையாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள பல கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி செய்யக்கூடிய கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மத்திய அரசின் எப்சிஐ குடோன்களில் இருப்பில் உள்ள உணவுக்கு பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களை,  மானிய விலையில் கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News