நாமக்கல்லில் முப்பெரும் தேர்த்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மர் முப்பெரும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர்

Update: 2024-03-26 05:00 GMT

நாமக்கல் கோட்டையில் இன்று காலை நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மர் சுவாமி பங்குணி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். (உள்படம்) தேரில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நரசிம்மர் சுவாமி.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி திருக்கோயில், மலையைக் குடைந்து குடவரைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்கோயிலின் மேற்குப்புறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. மலையின் கிழக்குப்புறத்தில் ஸ்ரீ அரங்கநாயகித் தாயார் உடனுறை அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது.

இந்த 3 கோயில்களிலும் பங்குனி தேர்த்திருவிழா கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வருகிறது. இன்று 26ம் தேதி காலை கோட்டைப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மப் பெருமாள் திருத்ததேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு, நகராட்சி துணைத்தலைவர் பூபதி, கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் தேர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில் ஸ்ரீ அரங்காநதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. முப்பெரும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், நாமக்கல் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் மேற்பார்வையில், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Tags:    

Similar News