நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவக்க எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை

Namakkal News Today - நாமக்கல் மாவட்டத்திற்கென தனியாக மத்திய கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி, மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2022-12-03 07:45 GMT

நாமக்கல்லில் மத்திய கூட்டுறவு வங்கி துவக்க கோரி, கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் மனு அளித்தார். அருகில் நாமக்கல் எம்.பி சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர்.

Namakkal News Today - நாமக்கல் மாவட்டத்திற்கென தனியாக மத்திய கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி, மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தல், மாவட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமையில் வகித்தார். ராஜ்யசபா எம்.பியும், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார், கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்திற்கான வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனுவை அளித்தார்.

அந்த மனுவில், நாமக்கல் மாவட்டம் கடந்த 1996ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கான பல்வேறு அரசு அலுவலகங்கள் ஏற்கனவே துவக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இம்மாவட்டத்தில், விவசாயம் மற்றும் அதன் சார்ந்ததொழில்கள் (பால்வளம், கோழிப்பண்ணை) முதன்மை தொழிலாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்,நெசவாளர் கூட்டுறவு சங்கம், வீட்டு வசதி சங்கம், வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் மாவட்டத்திற்கு என்று தனியாக தொடங்கப்படாமல் உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் இந்த சங்கங்கள் இயங்கி வருவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது.

Namakkal News

நாமக்கல் மாவட்டத்திற்கு புதியதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்தனர். கடந்த 2003ம் ஆண்டு இதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் தற்போது பல்வேறு தொழில்களிலும் வளர்ச்சி பெற்று முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. ஏராளமான அரசு மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. தற்போதைய சூழ்நிலை மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு, வணிக வங்கிகளக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளும் செயல்படும் வகையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News