மக்களின் மனு மீது உடனுக்குடன் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் அட்வைஸ்

பொதுமக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் வலியுறுத்தினார்.

Update: 2021-07-16 11:10 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள, அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்த காலத்திற்குள் மக்களை சென்றடையும் வகையில் உடனுக்குடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் ஆகியவை அனைத்து துறைகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இம்மனுக்களின் மீது களஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு விவரம் தெரிவிக்க வேண்டும். சுற்றுலாத்துறை அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களின் மூலம் பெற்ற மனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு துறை வாரியாக பிரித்து வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து வழங்கும் மனுக்கள் மீது அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆராய்ந்து மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனு தங்கள் துறையைச் சார்ந்த, பிற சார்புத்துறைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டியவையாக இருந்தால் சம்மந்தப்பட்ட அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மனுவை அவரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு திட்டங்களின் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாமல் அனைவரும் பயனடையும் வகையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட வழங்கல்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களும் ஆர்வத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார். கூட்டத்தில், டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல் உட்பட அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News