கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது..?

பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்து உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று நுகர்வோர் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2024-06-18 09:45 GMT

கோப்பு படம்


பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த  தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது  நுகர்வோர் கோர்ட் கேள்வி?

நாமக்கல் :

பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தனியார் பஸ் நிறுவனம், இழப்பீடாக, 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இதற்காக பஸ்சின் பர்மிட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும் நுகர்வோர் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் பாரதிவாணன் (41). இவர், 2023 மார்ச்சில் சேலம் கந்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக, தனியார் பஸ்சில் சென்றார். அப்போது, கன்டக்டரிடம் ரூ. 10 கொடுத்து பயண சீட்டு கேட்டபோது, ரூ. 10க்கான பார்சல் கட்டண டிக்கட் வழங்கியுள்ளார். கந்தம்பட்டியில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம், ரூ.7, அதற்கு பதில், ரூ. 10 ஏன் வசூல் செய்கிறீர்கள், மீதி ரூ. 3 ஐ கொடுங்கள் என கேட்டுள்ளார்.

ஆனால், கன்டக்டர் தரக்குறைவாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பயணி பாரதிவாணன், அரசு கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக, சேலம் மேற்கு ஆர்டிஓவிடம் தனியார் பஸ் கன்டக்டர் மீதும், பஸ் உரிமையாளர் மீதும் புகார் செய்துள்ளார். விசாரணையில், அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக பயண கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. அதையடுத்து, ஆர்டிஓ உத்தரவுப்படி, பஸ் உரிமையாளர், 3 ரூபாயை பேங்க் டி.டி மூலம் பாரதிவாணனுக்கு அனுப்பி உள்ளார்.

பஸ் நிர்வாகமும், கன்டக்டரும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலித்ததற்காகவும், சரியான நடவடிக்கையை ஆர்டிஓ எடுக்காததற்காகவும், பாரதிவாணன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நுகார்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், கூடுதலாக மூன்று ரூபாய் கட்டணம் வசூலித்ததற்கு இழப்பீடாக ரூ. 1,000, வழக்கு செலவு தொகையாக ரூ. 1,000 ரூபாய், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, பஸ் உரிமையாளர், 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். பஸ் உரிமையாளர், 2 வார காலத்துக்குள், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ஆஜராகி, வரும் காலங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் தொகையை பயணிகளிடம் வசூலிக்க மாட்டோம் என, உறுதி மொழியை வழங்க வேண்டும்.

நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக, ஏன் பஸ் பர்மிட்டை ரத்து செய்யக்கூடாது என்பதற்கு, சரியான முகாந்திரத்தை வழங்க வேண்டும். அவற்றை செய்யத்  தவறினால், பஸ் வழித்தட பர்மிட்டை ரத்து செய்ய ஆர்டிஓவிற்கு உத்தரவிடப்படும்.

ஆர்டிஓ 2 வார காலத்திற்குள் நுகர்வோர் கோர்ட்டில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட கன்டக்டரின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ததற்கான உத்தரவினை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், கோர்ட்டில் உண்மைக்கு புறம்பான சாட்சியத்தை வழங்கியதாக, சேலம் மேற்கு ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News