நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல்லில் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், 1 லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்.

Update: 2022-03-12 01:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், ஒரு லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல்தவணை தடுப்பூசி, 12 லட்சத்து 33 ஆயிரத்து 950 பேருக்கும் (84.27 சதவீதம்), இரண்டாம் தவணையாக 9 லட்சத்து 16 ஆயிரத்து 745 பேருக்கும் (62.61) செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற 23 மெகா தடுப்பூசி முகாம்களில், 7,37,792 பேர் பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனர்.

இன்று 12ம் தேதி சனிக்கிழமை, 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 401 நிலையான முகாம், 21 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 422 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும், முதல் தவணை போட்டு, இரண்டாம் தவணை நிலுவையில் உள்ளவர்களும், அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News