முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முதியோருக்கு சேவை குறைபாடு புரிந்த எஸ்பிஐ வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

Update: 2024-04-23 10:00 GMT

இன்சூரன்ஸ் செய்து இறந்துபோன மாட்டிற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 40 ஆயிரத்தை, விவசாயி சிவகாமியிடம், நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் வழங்கினார்.

முதியோருக்கு சேவை குறைபாடு புரிந்த எஸ்பிஐ வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி, அபிராமி நகரை சேர்ந்தவர் கணேசன் (63). அவர், 2022ம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு பணம் செலுத்துவதற்காக, வங்கி கணக்கில், ரூ. 1 லட்சத்து, 88 ஆயிரத்த 500ஐ, கோவை சிட்டி எஸ்பிஐ வங்கி கிளையில் செலுத்தி உள்ளார். வங்கி நிர்வாகம் கோவை மாநகராட்சிக்கு பணத்தை அனுப்பாமல், மற்றொரு வங்கியில் உள்ள தனி நபரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டது.

பணம் செலுத்திய கணேசன், மாநகராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது இன்னும் பணம் வரவில்லை என தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்தவர், வங்கிக்குச் சென்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பரிசோதனை செய்தபோது, கணக்கெண்ணில் வங்கி, ஒரு எண்ணை மாற்றி பணத்தை அனுப்பியது தெரியவந்துள்ளது. அதையடுத்து, சம்மந்தப்டட்ட வங்கியை தொடர்பு கொண்டு, பணத்தை திரும்ப அனுப்புமாறு எஸ்பிஐ வங்கி வலியுறுத்தியது. ஆனால், முழு பணத்தையும் திருப்பி அனுப்புவதற்கு முன், கணக்கில் இருந்து, ரூ. 80 ஆயிரத்தை அந்த வாடிக்கையாளர் எடுத்து விட்டார். மீதி பணத்தை மட்டும் அந்த வங்கி எஸ்பிஐ வங்கிக்கு அனுப்பியது.

தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி வங்கி சேவை குறைபாடு காரணமாக மன உளைச்சலையும், இழப்பையும் வங்கி ஏற்படுத்தி விட்டது என, 2023ம் ஆண்ட கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கணேசன் வழக்கு தாக்கல் செய்தார். விரைவான விசாரணைக்கு, கடந்த பிப்ரவரி மாதம் அந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், வங்கி சேவை குறைபாட்டால், மூத்த குடிமகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக, வங்கி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்த கணேசனுக்கு, இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய், 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால், ஆண்டு 9 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்சூரன்ஸ் செய்து, இறந்து போன மாட்டுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, கடந்த, ஜனவரி மாதம், நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம், நீதிபதி ராமராஜ் முன்னிலையில், சேந்தமங்கலம் அடுத்த சின்னப்பள்ளம்பாறையை சேர்ந்த அருளரசு மனைவி சிவகாமிக்கு ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News