நாமக்கல்லில் பலத்த காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்லில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-06-06 04:15 GMT

பைல் படம்.

நாமக்கல்லில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் பகுதியில் கடந்த வாரம் அக்னி நட்சத்திர காலத்தில், விட்டுவிட்டு மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெய்யில் அதிகரித்தது. அதனால் பல் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை மதியம் மிக அதிகமாக வெய்யில் இருந்தது. இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நகரின் பல இடங்களில் விளம்பர போர்டுகள் காற்றில் பறந்தன. சாரலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியதால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல்லில் திருச்சி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த புளியமரம் ஒன்று ஒடிந்து ஓட்டல் மேற்கூரையில் விழுந்தது. . இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நாமக்கல் நகரம் இருளில் மூழ்கியது. கன மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் (மில்லிமீட்டரில்): நாமக்கல் நகரம் 40, கலெக்டர் அலுவலகம் 53, குமாரபாளையம் 10.6, மங்களபுரம் 8, பரமத்திவேலூர் 2, புதுச்சத்திரம் 10, ராசிபுரம் 10.2, சேந்தமங்கலம் 12, திருச்செங்கோடு 36, கொல்லிமலை செம்மேடு 5. மாவட்டத்தில் மொத்தம் 196.8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News