காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு: நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 2 இல் தொடக்கம்...

காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது.

Update: 2022-12-31 09:30 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).

காவல் துறை பணிக்கான உடல் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் நடபெற்ற, இரண்டாம்நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துதேர்வில் வெற்றிபெற்றவர்கள், அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல்திறன் சோதனை தேர்வில் வெற்றிபெற உரிய வகையில் உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் தேர்வுக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2 ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணொலி வழிகற்றல், மின்னணு பாடமாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய்பெயர், முகவரி, ஆதார்எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பயனீட்டாளர் பெயர் மற்றும் ஓடிபி வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வுசெய்து, அதில்வரும் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டவுன் லோடு செய்யலாம். மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் அரசு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணிவரையும், இதன் மறுஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News