ராகுல்காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம்: மாநில செயல் தலைவர்

ராகுல்காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சென்னையில் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.

Update: 2023-04-08 06:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேசினார்.

ராகுல்காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சென்னையில் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டது சம்மந்தமான, தொடர் போராட்டங்கள் குறித்து, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக்கு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்திற்கு பின்னர் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 2019ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியபோது, பிரதமர் நரேந்திரமோடி, தொழிலதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி, அதானி போன்றோருக்கு சலுகை அளித்து வருகிறார் என்று பேசினார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியோ, நீரவ் மோடி மற்றும் லலித் மோடியோ ராகுல் காந்தி மீது வழக்கு தொடரவில்லை. அதற்குப் பதிலாக குஜராத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் புருனேஷ் மோடி என்பவர், கர்நாடாவில் வழக்கு தொடராமல், குஜராத் மாநிலம் சூரத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் தெரிவித்தார். இதற்கிடையில் வழக்கை தொடர்ந்து புருனேஷ் மோடி, கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து அந்த வழக்கு விசாரணைக்கு தடை பெற்றார். அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில், பார்லிமெண்டில் அதானி விவகாரம் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அது பரபரப்பானது. அப்போது திடீரென்று புருனேஷ் மோடி மீண்டும் குஜராத் கோர்ட்டிற்கு சென்று ராகுல்காந்தி மீது மீண்டும் அவதூறு வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்குவிசாரணையை மிக விரைவாக நடத்தி முடித்து, சுமார் 24 நாட்களில், ராகுல் காந்தி எம்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடியாக அவரின் எம்.பி பதவியை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்கில், இதுபோன்ற தண்டனை யாருக்கும் விதிக்கப்படவில்லை. முதன் முதலில் ராகுல்காந்திக்குதான் இதுபோன்ற தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் எதிர்க்கட்சிகளை நசுக்கும் போக்கை காட்டுகிறது.

சமீபத்தில் இந்தியாவில், 125 நிலக்கரி சுரங்கங்களுக்கானஏலம் நடைபெற்றது. அதில் 4 பெரிய சுரங்கங்களை அதானி கம்பெனி ஏலம் எடுத்துள்ளது. மற்ற சுரங்கங்களை ஏலம் எடுத்தவர்கள் லாபத்தில் 22 சதவீதத்தை மத்திய அரசுக்கு பங்காக அளிப்பதாக ஏலம் எடுத்துள்ளனர். ஆனால் அதானி கம்பெனி 4 சதவீத லாபத்தை மட்டுமே மத்திய அரசின் பங்காக அளிப்பதாக ஏலம் எடுத்துள்ளனர். 2014ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி, 2022ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு வந்துள்ளார். அவர் சாஃப்ட்வோர் போன்ற முக்கிய தொழில்களை செய்து பணக்காரர் ஆகவில்லை. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்போர்ட்டுகள், துறைமுகங்கள் போன்ற நிறுவனங்களை டெண்டர் பெற்று நடத்தி பணக்காரர் ஆகியுள்ளார்.இது முழுக்க முழுக்க பாஜக மற்றும் பிரதமர் மோடியின் உதவியால் நடத்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியும், மத்தியஅரசும், பணக்காரர்களுக்கு துணை போவதால், இந்தியாவின் 50 சதவீதம் சொத்துக்கள் வெறும் 6 சதவீத தொழிலதிபர்களிடம் உள்ளது. குறிப்பாக 3 பணக்காரர்களின் கைகளில் நாட்டின் தொழில்துறை சென்றுகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் சிறிய தொழில் அதிபர்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் பின்னனியில் உள்ள விதிமீறல்கள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வருகிற 15ம் தேதி தமிழகத்தில் மாவட்டம்தோறும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும். இம்மாதம் இறுதியில் சென்னையில் லட்சக்கணக்கான பொதுமக்களை திரட்டி, மிகப் பெரிய சத்தியாகிரக போராட்டத்தை நடத்திட உள்ளோம்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதாக கவர்னர் ரவி கூறியுள்ளார். அவரிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், மத்திய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகள் மூலம், தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொனரவேண்டும். அதை விடுத்து அரசியல்வாதி போல் அறிக்கை விடுவது கவர்னர் பதவிக்கு உகந்ததல்ல. தமிழ்நாடு மக்களுக்கு உணவளிக்கும் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை, காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அப்படி திட்டம் இருப்பின் மத்திய அரசு அதை கைவிட வேண்டும். மீறி சுரங்கம் அமைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டங்களில் ஈடுபடும் என்று கூறினார். கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், நிர்வாகிகள் மெய்ஞானமூர்த்தி, சாந்தி மணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News