அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...! அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பரஸ்பரம் வாழ்த்து..!

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தால் விரோதிகளாக பார்க்கும் நிலையில் நாமக்கல்லில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தது அனைவைரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Update: 2024-03-25 12:45 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம் ஆகிய இருவரும் கட்டித்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அருகில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி ஆகியோர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 3 கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, கை குலுக்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப். 19ம் தேதி அன்று, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையொட்டி கடந்த 17ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வரும் 27ம் தேதி மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. நேற்று 25ம் தேதி பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளாகும்.

மேலும், திங்கள்கிழமை பகல் 10.30 முதல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர். முதலில் திமுக கூட்டணியில் போட்டியிடும், கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவருடன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் வந்தனர். அவர்கள் ஒரு அறையில் உட்கார்ந்து வேட்புமனுவை சரிபார்த்தனர்.

அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா, எம்எல்ஏக்கள் சேகர், சுந்தரரராஜன் ஆகியோரும் வந்தனர். அவர்கள் மற்றொரு அறையில் அமர்ந்து வேட்பு மனு தாக்கலுக்கான வேலையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் டாக்டர் ராமரலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பாஜக மாநில தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார், மாவட்ட தமாகா தலைவர் கோஸ்டல் இளங்கோ மற்றும் கூட்டணி கட்சியினர் வந்தனர். அவர்கள் முதல் மாடி வெராண்டாவில் அமர்ந்திருந்தனர்.

அவர்களைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர் டாக்டர் ராமலிங்கத்தை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பாஜக வேட்பாளர் ராமலிங்கம் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட பாஜகவும், அதிமுகவும் இப்போது தனித்தனியாக போட்டியிட்டாலும், பழைய நண்பர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டது கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News