750 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்: சிவசங்கர் தகவல்

தமிழகம் முழுவதும், கருணை அடிப்படையில், 750 பேருக்கு மேல், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.

Update: 2024-02-25 02:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து கழகங்களில் பணியின்போது இறந்த, பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை, அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் உமா, ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர்.

தமிழகம் முழுவதும், கருணை அடிப்படையில், 750 பேருக்கு மேல், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், நாமக்கல் டெப்போவில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா, விபத்திலாமல் பணிபுரிந்த டிரைவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார். சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வரவேற்றார். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பணி நியமன உத்தரவு மற்றும் டிரைவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவிலேயே, அதிக பஸ்களை கொண்ட அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை தான். அதற்கு வித்திட்டவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. 2006-11ல், முதல்வராக இருந்த கருணாநிதி, ஐந்தாண்டு காலத்தில், 15 ஆயிரம் பஸ்களை வாங்கி அரசு போக்குவரத்து துறையை வலிமையான துறையாக மாற்றினார். அவருடைய முயற்சியால் உருவான இந்த துறை, தற்போதைய முதல்வரால் காப்பாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போக்குவரத்து கழகத்திற்காக ரூ. 2,800 கோடி நிதியை முதல்வர் வழங்கினார். இந்து ஆண்டு நிதி உதவி 3,050 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தை அறிவித்தபோது, அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த மகளிர் எண்ணிக்கை, 40 சதவீதம். அதேபோல், இலவச பஸ் பாஸ் வழங்கி இருக்கின்ற தொகை ரூ. 1,521 கோடி. மேலும், டீசல் மானியமாக வழங்கியுள்ள தொகை ரூ. 1,300 கோடி ரூபாய். மொத்தம் இந்த பட்ஜெட்டில் ரூ. 6,371 கோடி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்ககப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அரசு போக்குரவத்து கழகங்களில், பணிக்காலத்தில் இறந்து போனவர்கள் குடும்பம் நிர்க்கதியாக இருக்கும் என்பதால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை உடனடியாக துவங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், போக்குவரத்து துறையில், முதல் கட்டமாக, 136 பேருக்கு சென்னையில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டதில், இதுவரை, 750 பேருக்கு மேல், தமிழகம் முழுவதும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஆதப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News