நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

Update: 2024-04-16 03:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் உமா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 687 வாக்குப்பதிவு மையங்களில், மொத்தம் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 53 வாக்குப்பதிவு மையங்களில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 65 சதவிகித வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ராசிபுரம் தொகுதியில் 170 வாக்குச்சாவடிகள், சேந்தமங்கலம் 185, நாமக்கல் 188, பரமத்தி வேலூர் 165 வாக்குச்சாவடிகள், திருச்செங்கோடு 170, குமாரபாளையம் தொகுதியில் 182 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.

இவற்றில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 886 வாக்குச்சாவடிகள் சாதாரண வாக்குச்சாவடிகளாகும். இப்பணிகளில் மாவட்ட அளவில் 1 ஒருங்கிணைப்பாளர், சட்டப்பேரவை தொகுதி வாரியாக தலா 1 ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 6 நபர்கள், தலா 5 தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 30 பேர், வாக்குச்சாவடி நிலை தன்னார்வலர்கள் 268 நபர்கள் என மொத்தம் 320 நபர்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என கூறினார்.

Tags:    

Similar News