தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 8,060 பேர் உயிரிழப்பு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 45,489 விபத்துகளில், 8,060 பேர் உயிரிழந்துள்ளனர் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு கூறினார்.

Update: 2021-11-10 14:00 GMT

நாமக்கல் அருகே அய்யம்பாளையத்தில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 45,489 விபத்துகளில், 8,060 பேர் உயிரிழந்துள்ளனர் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில், தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதால், சாலை விபத்துகள் இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்காக, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி, இந்திய அளவில் 12.75 சதவீதம் சாலை விபத்துகள் தமிழகத்தில் நடந்துள்ளன. அதில் தமிழகத்தில் 57 ஆயிரத்து 228 சாலை விபத்துகளில், 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர். 2020ல் 45 ஆயிரத்து, 489 விபத்துகளில் 8,060 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 2019ல் 1,849 சாலை விபத்துகளில் 403 பேர் இறந்துள்ளனர். 2020ல் 1,495 விபத்தில் 245 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில், அக்டோபர் மாதம் வரை 1,084 விபத்துகளில் 153 பேர் உயிரிந்துள்ளனர். தமிழகம் முழுவதும், பசுமை பரப்பை அதிகரிக்க, நெடுஞ்சாலைத்துறையின் மூலம், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல்லில் இன்று 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

முன்னதாக, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அய்யம்பாளையத்தில் சாலையோரம் 200 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். டிஆர்ஓ துர்காமூர்த்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News