இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 33 பேருக்கு பிடிவாரண்ட்

இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 33 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-02 09:15 GMT

பைல் படம்

வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடு மற்றும் வேறு காரணங்களுக்கும் எதிர் தரப்பினர் பணம் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்புகளை நிறைவேற்றாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட 72 மனுக்கள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் இன்று 2ம் தேதி ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 25 வழக்குகளில் 33 பேர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டார்.

நாமக்கல் நுகர்வோர் கோட்டில், 2005 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தாக்கலான 34 வழக்குகளில் மேல்முறையீடு (அப்பீல்) நிலுவையில் இருப்பதாக பணம் செலுத்த வேண்டியவர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை (ஸ்டே) ஏதேனும் மேல்முறையீட்டில் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஒரு வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக (அஃபிடவிட்) பணம் செலுத்த வேண்டியவர்கள் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் பணம் செலுத்த வேண்டியவர்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்றும், 2012 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை தாக்கலான 8 வழக்குகளில் பதில் உரை தாக்கல் செய்யவும், விசாரணை நடத்தவும் இறுதியாக 4 வாரம் அவகாசம் வழங்கி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

2006 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தாக்கலான 18 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்ட்கள் காலாவதியான நிலையிலும் வழக்கு தாக்கல் செய்தவர்கள் பிடி வாரண்டுகளை அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையிலும் இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நுகர்வோர் கோர்ட், வழக்குகளில் பணம் செலுத்த வேண்டியவர்களாக உள்ள இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர், இந்தியன் வங்கியின் கபிலர்மலை கிளை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நாமக்கல் கிளை மேலாளர், தனியார் கொரியர் நிறுவனங்களின் 3 மேலாளர்கள், 8 தனியார் நிறுவன உரிமையாளர்கள், நாமக்கல்லில் உள்ள 5 தனியார் கடைகளின் உரிமையாளர்கள் உட்பட 24 நபர்களுக்கும், புதியதாக 7 வழக்குகளில் பணம் செலுத்த வேண்டியவர்களாக உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சங்ககிரி மேற்கு கிளை, கோவை ராம்நகர் கிளை மேலாளலர்களுக்கும், நாமக்கல்லில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முதுநிலை மேலாளர் உட்பட 9 நபர்களுக்கும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள வழக்குகளில், புகார்தாரர்கள் பிடி வாரண்டுகளை அனுப்ப தேவையான மனுவை, ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிடி வாரண்ட் கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் 4 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும், தவறினால் கைது செய்ய முடியாமல் போனதுக்கான காரணங்களை விளக்கி பிடி வாரண்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 68 வழக்குகள் மீண்டும் அடுத்த மாதம் 5ம் தேதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News