நாமக்கல் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி

நாமக்கல் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 08:21 GMT

இது குறித்து, நாமக்கல்  வேளாண்மை உதவி இயக்குனர் அன்புசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் வட்டாரப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், அரசு மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறையில், குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம்.

அதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு செல்வதால் அதிக விளைச்சல் கொடுக்கும். மேலும் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது. சொட்டு நீர்பாசனம் மூலம் உரமிடுவதால் பயிருக்கு தேவையான நீரும் ஊட்டச்சத்தும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கிறது. நீர் மற்றும் உரங்கள்வீணாவது தடுக்கப்படுவதோடு அவற்றின் பயன்பாட்டு திறனும் அதிகரிக்கிறது.

மக்காசோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கும் சொட்டு நீர்பாசனம் அல்லது தெளிப்பு நீர்பாசனம் அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசன கருவிகளும் நிறுவலாம். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News