சவுண்டம்மன் திருவிழா; கத்தி போட்டு அம்மனை அழைத்து வந்த வீரக்குமாரர்கள்
குமாரபாளையத்தில், சேலம் சாலை சவுண்டம்மன் திருவிழா கோலாகலமாக துவங்கியது.;
குமாரபாளையத்தில் சேலம் சாலை சவுண்டம்மன் திருவிழா துவங்கியது. சவுண்டம்மன் திருவிழா கத்தி போட்டு அம்மனை வீரக்குமாரர்கள் அழைத்து வந்தனர்.
குமாரபாளையத்தில் சேலம் சாலை சவுண்டம்மன் திருவிழா ஜன. 8ல் முகூர்த்தக்கால் வைபவத்துடன் துவங்கியது. நேற்று திருவிழா முதல் நிகழ்வாக சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. காவேரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் தொடங்கி, சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலில் நிறைவு பெற்றது.
அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தவாறு வந்தார். வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை தண்டகம் பாடி அழைத்து வந்தனர். வீரகுமாரர்கள் வீரமுண்டியை எதிர்த்து போராடுவது, சில வீரகுமாரர்கள் தரையில் படுத்திருக்க, அவர்கள் வயிற்றின் மீது வாழைக்காய் வைத்து, கத்தியால் துண்டிப்பது ஆகிய நிகழ்வுகள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. சாலை இருபுறமும் பக்தர்கள் பெருமளவில் திரண்டு அம்மனை வழிபட்டனர்.
இந்த திருவிழா மிக முக்கிய திருவிழா என்பதால், பல வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை சாமுண்டி அழைப்பு வைபவம், மாலையில் பெரிய பொங்கல் விழா நடக்கவுள்ளது. நாளை இரவு மகா ஜோதி திருவீதி உலா, ஜன. 17 காலை மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, மாலையில் அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
கோவில் வளாகம் முழுதும் அலங்கார பந்தலிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.