பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
பரமத்தி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பரமத்தி மற்றும் நாமக்கல் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.;
நாமக்கல் : பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக பரமத்தி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாணிக்கநத்தம், இருக்கூர் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதியான பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்கள்
இது குறித்த தகவல் அறிந்த இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள், அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
பரமத்தி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தோ்வு
இந்நிலையில், பரமத்தி தேசிய நெடுஞ்சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
கிராம மக்களின் மனு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். இந்த நிலையில், பரமத்தி, மாவுரெட்டி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கரைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பரமத்தியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதைத் தடுக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வழக்குரைஞர்கள் சங்கத்தின் நீதிமன்ற புறக்கணிப்பு
இந்த நிலையில் பரமத்தி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.