குமாரபாளையம்; பாதயாத்திரை தொடங்கிய முருக பக்தர்கள்
குமாரபாளையம் அருகே முருக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை தொடங்கினர்.;
குமாரபாளையம் அருகே முருக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை தொடங்கினர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆண்டுதோறும் காவடி எடுத்தவாறு, பாதயாத்திரையாக சென்னிமலை, சிவன்மலை செல்வது வழக்கம்.
நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்தவாறும், காவடிகள் எடுத்தவாரும் ஊர்வலமாக வந்தனர். விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்தனர். காவடிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர்.
ஊர் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என 250க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்தவாறுசென்னிமலை, சிவன்மலை புறப்பட்டனர். அரோகரா, என்ற சரண கோஷத்துடனும், முருகன் பக்தி பாடல்களை பாடியவாறும் பக்தர்கள் சென்றனர். ஆங்காங்கே பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தை மாதம் முழுதும் சென்னிமலை, சிவன்மலைக்கு காவடி எடுத்து சென்று வருவார்கள்.
குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில், அறுபடை யாத்திரை குழுவினர் சார்பில், யாக பூஜை, 108 சங்காபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சார்பில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், நடன விநாயகர் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மன் மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, சூரியகிரி மலை முருகன் கோவில் சார்பில் ஆயிரம் காவடிகள் அலங்கரிக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து வரப்பட்டது. கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.