குமாரபாளையம் கிரைம் செய்திகள்
குமாரபாளையம் பகுதியில் நடந்த டூவீலர்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
குமாரபாளையத்தில் டூவீலர்கள் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
குமாரபாளையம் கம்பர் தெருவில் வசிப்பவர் சூர்யநாராயணன், 62. விசைத்தறி கூலித்தொழிலாளி. இவர் டிச. 26ல் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக, மருத்துவமனை முன்பு காலை 08:50 மணிக்கு, தனது டி.வி.எஸ். 50 வாகனத்தை வெளியில் நிறுத்தி, பூட்டி விட்டு சென்றார். சிகிச்சை செய்து கொண்டு வெளியில் வந்து பார்த்த போது, வெளியில் நிறுத்தி வைத்த டூவீலரை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி, குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் சுரேஷ், 41. சுமை தூக்கும் தொழிலாளி. டிச. 21ல் மாலை 13:15 மணியளவில் குமாரபாளையம் இடைப்பாடி சாலை, புளியமரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஓட்டல் கடையில் சாப்பிட சென்றார். தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தை கடையின் முன்பு நிறுத்தி பூட்டி சென்றார். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்த போது தனது டூவீலரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இரண்டு புகார்களையும் பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், காணாமல் போன டூவீலர்களை தேடி வருகின்றனர்.
சரக்கு வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் டூவீலரில் வந்து, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சரக்கு வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் குலசேகரன், 32. கூலி. நேற்றுமுன்தினம் இரவு 07:40 மணியளவில் சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் ஹீரோ ஸ்ப்லேண்டர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு டூவீலரில் மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்த போது, சரக்கு வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த இவரது தாயார் செல்வராணி, 55, நேரில் வந்து, டாக்டரிடம் விசாரித்த போது, வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து செல்வராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்த போலீசார், விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் சங்ககிரி, புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த, கிரேஷ்குமார், 22, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.