சாலை விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க எமதர்மன் வேடத்தில் விழிப்புணர்வு..!
தமிழகத்தில் ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.;
நாமக்கல் : தமிழகத்தில் ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது.
நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடக கலைஞர்கள்
நூதன முறையில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் சாலையில் ஏற்படும் விபத்துகள் குறித்தும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் ஏற்படும் விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எமதர்மன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம்
எமதர்மன் வேடமணிந்த நபர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை எமதர்மன் தனது பாசக்கயிற்றினால் உயிரை எடுப்பது போல ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களிடம் செய்து காட்டி ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள்
சாலையில் ஹெல்மெட் அணியாமல் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி வந்தால் எவ்வாறு அடிபடும் என்பதையும் சாலையில் படுத்துக்கொண்டு நாடக நடிகர்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டினர்.
போலீசாரின் பங்களிப்பு
இந்நிகழ்வில் பங்கேற்ற நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி தலைமையிலான போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
நாடக நடிகர்களின் தத்ரூப நடிப்பு
அப்போது தலைக்கவசம் இல்லாமல் பயணித்து விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடுவது போன்ற காட்சிகளை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர்.இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.