இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் படுகாயம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், வேதாரண்யம் மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

Update: 2021-09-25 05:30 GMT

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை, நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆறுதல் கூறினார்.

நாகை மாவட்டம்,  வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து, பைபர் படகில் மீனவர் சிவகுமார் அவரது அண்ணன் சிவா, தந்தை சின்னத்தம்பி ஆகிய மூன்று பேர், நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே ,  நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,  2 பைபர் படகில் அந்த வழியாக வந்த  இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின் படகில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு குதித்தனர்.

பின்னர், இலங்கை கடற்கொள்ளையர்கள் சிவக்குமாரை தலையில் வெட்டி, மற்ற மீனவர்களையும் தாக்கினர். அத்துடன், தமிழக மீனவர்களின் படகில் இருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட 5  லட்சம் ரூபாய் மதிப்பிலான  பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பி ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்களை மீட்ட,  சக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தலையில் மூன்று இடங்களில் வெட்டுப்பட்ட மீனவர் சிவக்குமாருக்கு  15 தையல் போடப்பட்ட நிலையில், சிவா, சின்னதம்பி ஆகியோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆறுதல் கூறினார்.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை கண்டித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News