திட்டச்சேரி அருகே அரசு வாகனத்தில் மது கடத்தல் : அதிர்ச்சியடைந்த போலீசார்

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் அரசு வாகனத்தை சோதனை செய்த போலீசார் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-06-13 02:12 GMT

நாகப்பட்டினம் அருகே திட்டச்சேரியில் அரசு வாகனத்தில் மது கடத்திய அரசு ஊழியர் உள்பட 2  பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே நடுக்கடை பஸ் நிறுத்தத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி தலைமையில் மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான ஜீப்பை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானம் மற்றும் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான அரசு ஜீப் டிரைவரும், கீழ்வேளூரை சேர்ந்த ராஜேந்திரன் ( 52) , அவரது உறவினர் காந்தி (65) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் 100 மது பாட்டில்கள், 200 சாராய பாட்டில்களை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இதையடுத்து ஜீப்புடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நாகை மதுவிலக்கு போலீஸ் ஸ்டேசன் கொண்டு வந்தனர். இதுகுறித்து ராஜேந்திரன், காந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News