நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல்

நாகையில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கினார்.

Update: 2021-10-13 04:36 GMT

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்பு ராஜ்  தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு உத்தரவின்படி நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் இருக்கும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், வேதாரண்யம் என 4 தாலுகாவிற்கு 4 நடமாடும் கொள்முதல் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், விளைவிக்கப்பட்டுள்ள நிலத்தின் பட்டா, சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றுடன் நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் சென்று தரக்கட்டுப்பாடுகள் ஆய்வு செய்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News