கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க கோரி நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்

கேரள கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டு தரக்கோரி நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

Update: 2021-10-06 13:40 GMT

நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தினால் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகூரை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 30, ஆம் தேதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் படகில் இருந்த 11, மீனவர்கள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். ஆனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகும், வலைகளும் மீட்க முடியாமல் கடலில் மூழ்கி கிடக்கிறது.

இதனிடையே கேரளா கடலில் மூழ்கி கிடக்கும் விசைப்படகினை மீட்கக்கோரி நாகூர் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாகூர் வெட்டாறு துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கொச்சி துறைமுகம் அருகே கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகை மீட்காவிட்டால் அது உருக்குலைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மீனவர்கள், தமிழக அரசு கேரள அரசுடன் பேசி மூழ்கிக் கிடக்கும் வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டு தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News