வேளாங்கண்ணியில் கலை நிகழ்ச்சி நடத்தி கொரோனா தடுப்பூசி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கலை நிகழ்ச்சி நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-09-12 09:43 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்  கொரோனா தடுப்பூசி  செலுத்திக்கொள்ள  வந்த மக்களை வரவேற்க கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழக அரசின் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நாகை மாவட்டத்தில் 325 இடங்களில் நடைபெற்றது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களுக்கு வந்த மக்கள் அமரும் வகையில் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வேளாங்கண்ணியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ராட்சத ஊசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கொண்ட மாதிரிகளை வைத்துக்கொண்டு கலைஞர்கள் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி நடனமாடினர். இந்த விழிப்புணர்வு நடனம் தடுப்பூசி செலுத்த வந்த மக்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து, தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் விவரங்களை பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு மருத்துவர்கள் கோவாக்சின், கோவிஷீல்டு முதலாம் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுமான அருண்ராய், சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை மாவட்டத்தில் இன்று 325 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை 50 சதவீத முதல் டோஸ் தடுப்பு ஊசியும் 11 சதவீத இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக கூறினார் மேலும் இன்று மட்டும் நாகை மாவட்டத்தில் 25,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.


Tags:    

Similar News