கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு

75வது சுதந்திரதின விழாவினையொட்டி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு.

Update: 2021-09-01 07:15 GMT

சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள்.  

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவம் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 22 வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து டில்லி ராஜ்காட் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 22ம் தேதி கன்னியாகுமரியில் இந்த சைக்கிள் பேரணியை துவங்கிய அவர்கள், வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று டில்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி தளபதி ராஜேஷ் தலைமையில் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள வீரர்கள் இன்று காலை தர்மபுரியில் புறப்பட்டு, கிருஷ்ணகிரி டோல்கேட்டை வந்தடைந்தனர். முன்னதாக அவர்களுக்கு கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் இருந்து இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. டோல்கேட்டில் ஓய்வுபெற்ற கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட சிஆர்பிஎப் வீரர்கள் நலச்சங்கம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பங்கேற்று, வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முன்னாள் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர், ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். பின்னர் வீரர்களுக்கு எஸ்.பி., சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீரர்களை கைத்தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இவர்கள் சூளகிரியில் தங்கி நாளை ஓசூர் நோக்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி.க்கள் அன்பு, ராஜி, டி.எஸ்.பி., சரவணன், ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் எஸ்.ஐ., ரங்கநாதன், தலைமைக் காவலர் வினோத்குமார், சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் ஒரு நாளைக்கு 80 கி.மீ தூரம் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுடன் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர், மருத்துவக்குழுவினர் பாதுகாப்பிற்காக உடன் செல்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் வழியாக டில்லி நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டள்ளனர்.

Tags:    

Similar News