தேவையில்லாம வெளியே வராதிங்க: கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை!

நான்காவது முறையாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2021-06-14 04:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே 24 முதல் ஜூன், 14 வரை மூன்று வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது இன்று (ஜூன் 14) முதல் வரும் 24 வரை நான்காவது முறையாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் நுழைவு வாயிலில் கை சுத்திகரிப்பான் கட்டாயமாக வைப்பதோடு, தெர்மல் ஸ்கேன் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அழகு நிலையங்கள், சலுான்கள் குளிர் சாதன வசதி இன்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும்.

பூங்காக்களில் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை செயல்படலாம். டாஸ்மாக் கடைகள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம். மொபைல்போன் கடைகள், கட்டுமானப்பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதனப் பொருள் விற்பனைக் கடைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறைந்த ஆட்களுடன் இயங்கலாம்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News