குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், விடுமுறை நாளில் சுற்றுலா படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-09-20 06:00 GMT

குமரியில், படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு,  தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் இயற்க்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம். சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட சீசன் காலங்களில் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக,  சில மாதங்களாக கன்னியாகுமரியில் சுற்றுலா சொகுசு படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகள்படி, கடந்த 1ஆம் தேதி முதல் குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு இயக்கம் தொடங்கியது.

வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள், மீண்டும் களைகட்டத் தொடங்கியது, அதேவேளையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வாரம்தோறும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சுற்றுலா படகுகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாளில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா படகுகளில் செல்வதற்காக கன்னியாகுமரிக்கு வரும் நிலையில் படகு இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஊரடங்கு புதிய நெறிமுறைகளின்படி பேருந்துகள், இரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து செயல்படும் நிலையில் சுற்றுலா படகுகளையும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகளை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News