ஏலதாரர்கள் போராட்டத்தினால் வெறிச்சோடியது குளச்சல் மீன் பிடி துறைமுகம்
ஏலதாரர்கள் போராட்டத்தினால் குளச்சல் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்டகட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன. இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.
நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,
இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளை மீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சிலவிசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டன் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் 3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குளச்சல் மீன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.