தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.

தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கனிமொழி எம்.பி. கருத்து கேட்டார்.

Update: 2024-02-06 11:36 GMT

நாகர்கோவிலில் நடைபெற்ற ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

பிரதமர் தனது சாதனையை தெரிவிக்காமல் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை மட்டுமே செய்து வருகிறார் என கனிமொழி எம்பி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று (06/02/2024) நாகர்கோவில் கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் வைத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி  எம்.பி கூறியதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை மக்களை சந்தித்து பல்வேறு துறைகளில் இருக்க கூடிய பல்வேறு அமைப்புகள் சங்கங்களில் இருக்கக்கூடிய நபர்கள் மற்றும் தனி மனிதர்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகள் என்ன என்று கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பது தான் எங்களுடைய வழக்கம். இந்த முறை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அறிக்கையை தயாரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள்.

மழை காரணமாக தென் மாவட்டங்கள் கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் கஷ்டப்பட்டு இருக்கக்கூடிய வியாபாரிகள். விவசாயிகள் மக்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் இதுவரை எந்த உதவியும் நிதியும் கொடுக்கவில்லை. வெள்ள சேதங்களை மத்தியக் குழு மற்றும் ஒன்றிய நிதி அமைச்சர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதன் பிறகும் மக்களுடைய துயரத்தை துடைப்பதற்கு அவர்கள் முன் வரவில்லை. தொடர்ந்து தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வட மாநிலங்களுக்கு அதிகப்படியான நிதியும் தென் மாநிலங்களுக்குக் குறைந்த நிதியும் வழங்கப்படுகிறது. மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி அகற்றப்படும். மக்களையும் மாநில உரிமைகளையும் மதிக்கக்கூடிய மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க கூடிய அரசு உருவாகும்.

பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் தன்னுடைய சாதனைகளையும் தான் செய்ய இருக்கின்ற சாதனைகளையும் கூற வேண்டும். அதை விட்டுவிட்டு மறுபடியும் மறுபடியும் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதிலேயே நேரத்தை செலவிடுகிறார்.சில நேரங்களில் நீதிமன்றங்கள் வந்து நியாயத்தை சொல்லக்கூடிய சூழல் உருவாகிறது அது வரவேற்க வேண்டிய விஷயம். ஒன்றிய அரசாங்கம் எப்படி தேர்தல்களை நடத்துகிறது எந்த அளவில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ஒரே கட்டமாக ஒரு தேர்தலை நடத்த முடியாது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரே நாடு,ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு, ஒரே மதம் இவற்றை ஒன்றாக மாற்றுவது என்பது மாநிலத்தின் அடையாளங்களை அழிப்பதற்கு தான் பயன்படுமே தவிர இந்த நாட்டின் ஒற்றுமைக்குப் பயன்படாது. 

இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.

Tags:    

Similar News