கடற்கரைக்கு செல்லாதீங்க... கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கடற்கரைக்கு செல்லாதீங்க என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
அதீத கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிப்பதால், கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் இன்று கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த 12 மாணவர்கள், குமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் லெமூர் கடற்கரையில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
அப்போது திடீரென கடலில் குளித்த மாணவர்களில் 6 பேரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிலும் இருவர் உயிரிழந்தனர். லெமூர் பகுதியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேற்று குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் 7 வயது சிறுமி மாயமானார். பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். கடற்கரையின் அருகில் இருந்தவர்கள் பிரேமதாஸை மீட்ட நிலையில் சிறுமி ஆதிஷாவை அலை இழுத்துச் சென்றது. ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வந்தனர். கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் சிறுமியின் உடலை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 2 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக ஆட்சியர் ஸ்ரீதர் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம். கடலோர காவல்படை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுற்றுலாத்துறை என சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலில் பலத்த காற்று வீசுவதோடு, கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பேரிடர் மீட்பு படையினரும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.