தர்ப்பணத்திற்கு தடையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி

மாவட்ட நிர்வாகம் தர்ப்பணத்திற்கு தடை விதித்ததால், கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடியது.

Update: 2021-10-06 13:15 GMT
திதி கொடுக்க தடைவிதித்ததால், வெறிச்சோடி காணப்படும் குமரி கடல் பகுதி, திரிவேணி சங்கமம்.

வருடத்தில் ஆடி மாதம் தை மாதம் வரும் அமாவாசை போன்று, புரட்டாசி மாதம் வரும் அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் மறைந்த  மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய தர்பணம் கொடுத்து புனித நீராடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் பகுதி, குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திதி கொடுத்தல் என்ற தர்ப்பணம்  நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,  மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்யவும் கோவில்களில் தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் குமரி கடல் பகுதி, திரிவேணி சங்கமம், பகவதி அம்மன் கோவில், ரதவீதி கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

குமரி கடற்கரை சாலை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து,  பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தர்ப்பணம் செய்ய வந்தவர்களையும், சுற்றுலா பயணிகளையும் திருப்பி அனுப்பினர். வழக்கமாக தர்ப்பணம் நடைபெறும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை இருப்பதால்,  மாற்று நீர் நிலைகளை நாடிய பொதுமக்கள்,  அங்கு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Tags:    

Similar News