வாலாஜாபாத் : போதிய உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைப்பு

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்மேன், துணை சேர்மேன் தேர்தலில் வாக்களிக்க போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2021-10-22 10:15 GMT

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில் 21 பேர் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தரப்பில் 15 பேரும், காங்கிரஸ் தரப்பில் ஒருவரும், அதிமுக சார்பில் இரண்டு பேரும், சுயேச்சைகள் இரண்டு பேரும், பாமகவை சேர்ந்த ஒருவரும் என வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சஞ்சய் காந்தி என்பவரும் தேவேந்திரன் என்பவரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றிய குழுத் தலைவருக்கு இருதரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து அறிந்து உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க. சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய குழு அலுவலகத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் 2 மணி வரை நடை பெறாமல் இருந்தது இதனிடையே தேவேந்திரன் தரப்பு ஆதரவாளர்கள் ஒன்றிய குழு அலுவலகம் எதிரே சாலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை நடத்தக் கோரி கோஷமிட்டனர்.

இதன் காரணமாக வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சமரசம் ஏற்படாததால் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட காலத்தில் போதிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தலை ஒத்தி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News