காஞ்சிபுரத்தில் இடி தாக்கி பள்ளி மாணவன் பலி

வானிலை மாற்றம் காரணமாக மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் சுற்றுப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 40 நிமிடங்கள் பெய்தது.

Update: 2022-05-04 12:00 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 110 டிகிரிக்கு மேல் வெயில் நிலவியது. அக்கினி நட்சத்திரம் இன்று துவங்கிய நிலையில் மாலை 3மணியளவில்  காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் இடி மின்னல் மற்றும் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். இவரின்  இரண்டு மகன்கள் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்த இளைய மகன் நந்தா (ஏழாம் வகுப்பு மாணவன் - வயது 12) உணவு அருந்திக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால் வயல்வெளிக்கு சென்று மாடுகளை ஓட்டி வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றார்.

நந்தாவின் பெற்றோர்கள் செல்ல வேண்டாமென தடுத்ததையும் மீறி வீட்டின் அருகே உளள வயல் வெளிக்கு மாடுகளை ஓட்டி வர சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் நந்தா திரும்பி வராததால் பெற்றோர்கள் நந்தாவை தேடிக் கொண்டு சென்றனர். வயல்வெளி ஓரமாக இடி தாக்கி நந்தா சடலமாக கிடந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

நந்தாவை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். நந்தாவை பரிசோதித்த மருத்துவர் 'அவர் ஏற்கனவே இறந்து விட்டார்' என கூறியதை கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அழுது புலம்பினர். பள்ளி மாணவன் நந்தாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு பிணவறைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News