காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை தற்காலிக செவியலர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை

கொரோனா காலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தற்காலிக பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 70 நபர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-01 10:45 GMT

காஞ்சிபரம் அரசு மருத்துவமனையின் முன்பு பணி இழந்த செவிலியர்கள்.


தமிழகத்தில்  கொரோனா இரண்டாவது அலையில் வைரஸ் பரவல் அதிவேகமாக பரவி நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நோயின் தாக்கம் காரணமாக பலர் உயிர் இழந்தும் , தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து அரசு தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்ய அழைப்பு விடுத்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பணி புரிய எழுபது நபர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலையுடன் அவர்களது பணி நிறைவு பெற்றதாகவும் மீண்டும் தேவைப்பட்டால் அழைப்பதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் அனைவரையும் இன்று காலை பணிவிடுப்பு செய்துள்ளது.

இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில் , இக்கட்டான காலகட்டத்தில் தங்கள் பணியிடங்களை துறந்து அரசு மருத்துவ சேவைக்காக பணிக்கு வந்த நிலையில் குறைந்த கால நிலையில் தங்களை விடுவித்து வருத்தமளிப்பதாக உள்ளது.

எனவே மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் இது போன்று இருந்தால் இனி மூன்றாவது அலை தாக்கம் நிகழ்விற்கு அரசு அழைத்தால் கூட  பணிக்கு வர இயலாத சூழ்நிலை உருவாகிறது.

 தங்களின் வாழ்வாதாரம் எவ்வகையில் இருக்கும் எனும் பல கேள்விகளுடன் நாங்கள் தற்போது தவித்து வருவதால் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News