காஞ்சிபுரம் பள்ளி விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா பங்கேற்பு

பசுமை அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்த பள்ளி விழாவில் போலீஸ் டிஐஜி சத்தியபிரியா பங்கேற்றார்.

Update: 2022-05-16 16:45 GMT

பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி வழங்கினார் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா.

காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள்,புத்தகப்பை,எழுது பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளையும் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு பசுமை காஞ்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் எஸ்.கே.பி. கோபிநாத் தலைமை வகித்தார்.

அறக்கட்டளையின் அறங்காவலர் ஜெயவிக்னேஷ்,சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன்,மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறங்காவலர் தி.பச்சையப்பன் பிரபு வரவேற்று பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா தியாகி நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சியையும்,பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களையும் வழங்கிய பின்னர் பேசும்போது

வசதியானவர்களில் சிலருக்கு பணம் இருக்கலாம்,ஆனால் படிப்பு வராது.அதே நேரத்தில் வசதி இல்லாத சிலருக்கு படிப்பு வரும், ஆனால் பணம் இருக்காது.கல்வி என்பது அழியாத செல்வம்.இந்தியாவின் முன்னாள் பிரதமர்களாக இருந்த லால்பாகதூர் சாஸ்திரி,சரண்சிங் ஆகியோர் வசதியில்லாமல் இருந்தவர்கள். நன்றாகப் படித்து தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.தெருவிளக்கில் படித்த அப்துல்கலாம் வாழ்வில் உயர்ந்து இந்தியாவிலேயே உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த பெருமைக்குரியவர்.

குழந்தைகளிடம் என்ன குறைகள் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அக்குறைகளை களைய பெற்றோர்கள் முன்வர வேண்டும்.வாழ்க்கையின் உயர்வுக்கு மதிப்பெண்கள் அவசியம்.ஆனால் அது மட்டுமே வாழ்க்கையை உயர்த்தி விடாது என்றார்.

விழாவில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தி.அரவிந்தராஜ், ஜெ.சந்தோஷ்,எஸ்.மோனிகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News