மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம்: ஊராட்சிகளுக்கு புது உத்தரவு

மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடும் வேளையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இயக்ககம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-09 13:45 GMT

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தை காப்பதும், அதனை பெருக்குவதும் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கம் ஆகும். தற்போது மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களின் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2024ல் அனைத்து ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 1168 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என அறிவிக்கப்பட வேண்டும். எனவே உலக தண்ணீர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மார்ச் 22ம் தேதி 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டி அதில் தக்க தீர்மானங்களை நிறைவேற்றவும், கிராம சபை மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர் கிராம ஊராட்சி மூலம் வழங்கும் குடிநீரை பருகி குடிநீர் தரத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News