வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார் காஞ்சிபுரம் காமாட்சியம்மன்

கோடை விழாவினையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

Update: 2022-05-18 00:40 GMT

காஞ்சிபுரம் கோவிலில் லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்மன் எழுந்தருளினார்.

கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்துக்கு 3 நாட்கள் எழுந்தருள்வது வழக்கம்.

இந்த ஆண்டு வசந்த உற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.விழாவை தொடர்ந்து 3 நாட்களும் தினசரி இரவு உற்சவர் காமாட்சி அம்மன் லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு மந்திர புஞ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை உற்சவர் காமாட்சி அம்மன் லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் கேடயத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பின்னர் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு வசந்த மண்டபம் முழுவதும் கரும்புகள்,வண்ண மலர்கள் மற்றும் பலவகையான பழங்கள், நிறம் மாறும் வண்ண மின்விளக்குகளாலும் செயற்கைத் தோட்டம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வேத விற்பன்னர்களால் வேதபாராயணமும், கோயில் தேவஸ்தான ஸ்தானீகர்களால் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் சகஸ்ரநாம மந்திர புஷ்பாஞ்சலியும் நடந்தது.

விழாவினை முன்னிட்டு சென்னை ஜெயலட்சுமி மற்றும் சோபனா சுவாமிநாதன் குழுவினரின் வீணைக்கச்சேரியும் நடந்தது.

தீபாராதனைகளுக்குப் பிறகு அம்மன் மீண்டும் வசந்த மண்டபத்திலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News