கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் : வழிகாட்டி நடைமுறைகள்‌அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து காஞ்சியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Update: 2022-10-21 15:30 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வி ஆர் பி சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கேளிக்கை விடுதியில் இன்று கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்ய கட்சி பட்டு  கிராம பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலே  உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விடுதி மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோரைக்  கைது செய்தனர்.  உயிரிழந்த நபர்களின் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காகக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கெனவே கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது பாதுகாப்பான முறைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சி உள்ளாக்கியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெறும் மூன்றாவது பெரிய கழிவு நீர் தொட்டி விபத்தாகும் இது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் இதுகுறித்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆலோசனை பெயரில் , ஆணையாளர் கண்ணன் இன்று மாலை வெளியிட்ட எச்சரிக்கை செய்தி குறிப்பில், 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய விதிகளுக்கு முரணாக தனி நபரை நியமிப்பது சட்ட விரோதமானதும், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

 உத்தரவை மீறி சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வீட்டு உரிமையாளர் அல்லது ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள். கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் குழாயில் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும். மனிதர்கள் மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பு அகற்றுவது, சுத்தம் செய்வதை கண்டறிந்தால் கட்டணமில்லா தொலைபேசி 1800-425-2801 (Toll Free Number) எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் மனித கழிவை மனிதன் அகற்றும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் விதிகள் 2013 (Prohibition of Employment as Manual Scavangers and their Rehabilitation Act, 2013) ன் படியும் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெறும் போதெல்லாம் இது போன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்தாலும் இதனை பின்பற்றுவதில் வீட்டு உரிமையாளர்களோ அல்லது இப்பணியை மேற்கொள்ளும் தனிநபர்களோ கண்டு கொள்வதில்லை என்பதும் ஒருபக்கம் வருத்தம் அளிக்கிறது.உரிமங்கள் ரத்து சட்டங்கள் கடுமையனால் மட்டுமே இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..

Tags:    

Similar News