மொட்டை அடித்து திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழு, ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பு சார்பில் வரும் 16ம் போராட்டம் அறிவித்துள்ளனர்.

Update: 2023-04-12 11:45 GMT

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டாம் என ஏகனாபுரம் கிராம மக்கள் நேற்று 259 நாள் போராட்டம் குறித்த அறிவிப்பு பலகை.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இரண்டாவது  பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டது.

அவ்வகையில் 13 கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தையும் கையகப்படுத்தி விமான நிலையம் அமைய உள்ளதாக வெளியான தகவல்கள் அடுத்த நாளே அக்கிராம மக்கள் புதிய பசுமை விமான நிலையத்திற்கு நிலம் தர மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தங்கள் பகுதிகளில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டங்களை பேரணி, ஆர்ப்பாட்டம் என நடத்தி வந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, வேலு,  அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இருகட்ட  பேச்சுவார்த்தையில்  கலந்து கொண்ட எதிர்ப்புக் குழு கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்திய நிலையில் அது குறித்து எந்த இறுதி முடியும் எடுக்கப்படாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுவரையில் மூன்று கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் தங்கள் பகுதிக்கு வேண்டாம் எனக் கூறி கிராம சபை கூட்டத்தில் ஒருமித்தமாக எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு புதிய கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவையில் வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளதால் அதற்கான நிலையை அவர்கள் தான் எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கூறியதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று 259 ஆவது நாள் இரவு  போராட்டத்தில்,  தங்களது கோரிக்கை அரசு செவிசாய்க்காமல்,  கண்டு கொள்ளாமல் மக்களின் வாழ்வாதாரத்தையும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் அழியும் கலாச்சாரம்,  வரலாறு , பண்பாடு,  சுதந்திரமான பொருளாதாரத்தை பற்றி சிறிதும் சிந்தனையின்றி ஆளும் திராவிட மாடல் அரசு விளங்குவதால்,  விடியல் கிடைக்காமல் அழிந்து விடுமோ என்ற அச்சம் நிறைந்த சூழலில் அரசின் திட்டத்தை எதிர்த்து வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஏகனாபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு கிராம மக்கள் தங்களது முடியை நீக்கி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்துடன் பெண்கள் ஒப்பாரி போராட்டமும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்புக்கான நடவடிக்கை என்ன என்பதை இன்னும் சற்று நாள் உள்ள நிலையில் போராட்டத்தை இம்முறையாவது பேசி தீர்ப்பார்களா என ஆவலுடன் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News