காஞ்சி மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி காஞ்சிபுர மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, பாஜக, பாமக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் இன்று காலை துவங்கியது. இக்கூட்டத்தில் திமுக அதிமுக பாஜக பாமக உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீண்டாமை உறுதிமொழி மற்றும் பிளாஸ்டிக் இல்லா காஞ்சியை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
இதன்பின் மேயர் முன்னிலையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. சொத்து வரி உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விளக்கங்கள், அதன் அடிப்படையில் விதிக்கப்படும் வரிகள் குறித்து தீர்மானங்களாக படிக்கப்பட்டது.
திடீரென அதிமுக உறுப்பினர்கள் எழுந்து சொத்து வரி உயர்வை கண்டித்து திரும்பப் பெறக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். இது அரசு ஆணை எனவும், தமிழகத்திலேயே காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் வரி உயர்வு போடப்பட்டு உள்ளதாகவும் இது எந்த விதத்திலும் பொதுமக்களை பாதிக்காது என ஆணையர் நாராயணன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து திமுக - அதிமுகவினர் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று இறுதியில் தீர்மானத்திற்கு எதிராக அதிமுக பாமக பாஜக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், மாநகராட்சி அலுவலகம் முன்பு, சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சிப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.