காஞ்சிபுரம் அருகே வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கும் கிராமம்

காஞ்சிபுரம் அருகே வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கும் கிராமம் பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.

Update: 2023-03-29 12:34 GMT

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் வீட்டிற்கு வீடு முருங்கை மரம் வளர்க்கப்படுகிறது.


காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் வீட்டுக்கு வீடு முருங்கை மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய் என்றவுடனே நமக்கெல்லாம் உடனே நினைவுக்கு வருவது பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படக் காட்சி தான் ஆகும். ஆனால் இவையெல்லாம் தாண்டி முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மனிதனின் உடலுக்கு நன்மை தருகிறது என்றால் மிகையாகது.

இன்றளவும் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் முருங்கை மரம் வளர்ப்பதும் அதிலிருந்து பெறப்படும் உணவுகளால் இன்றளவும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது கொரோனா காலத்தில் மிகப்பெரிய வகையில் உணரச் செய்தது.


முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

இது போன்ற பல மருத்துவ குணங்களை உடைய இதனை காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராம பொதுமக்கள் வீடுகள் தோறும் வளர்த்து நாள் தோறும் ரூபாய் நூறு வருமானம் கிடைப்பதாகவும், வீட்டுக்கு தேவையான சத்தான காய்கறிகளையும் சுத்தமான இயற்கையான உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தேவைப்படும் நபர்கள் நேரடியாக தங்கள் வீடுகளுக்கு வந்து கொள்முதல் செய்வதால் மாதம் ரூபாய் 5000 வரை தங்களுக்கு லாபம் கிடைக்கிறது எனவும் எந்த ஒரு செலவும் இதனை பராமரிக்க தங்களுக்கு இல்லை என்பதும் கூடுதல் குடும்ப வருமானம் என்பதால் இதை வீடுதோறும் வளர்க்கிறோம் என அந்த கிராம மக்கள் பெருமையுடன் கூறி வருகிறார்கள்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகிறார்கள். ஆனால் சாதாரண மரம் மட்டும் அல்ல அதவும் வருமானம் தரக்கூடிய மரமாக வளர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த கிராம மக்களை சுற்று வட்டார கிராம மக்கள் மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News