Welfare Assistance To Village Beneficiaries பர்கூர் கத்திரிமலை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்; 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Welfare Assistance To Village Beneficiaries அந்தியூர் அடுத்த பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.;

Update: 2023-11-29 11:30 GMT

கத்திரிமலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Welfare Assistance To Village Beneficiaries

அந்தியூர் அடுத்த பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் கிராமத்தில்  நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி வளாகத்தில், நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.


இம்முகாமில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பர்கூர் ஊராட்சி கத்திரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நமக்கு பயனுள்ளதாகும். அதிலும், குறிப்பாக, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை தங்கள் வீட்டில் குழந்தை பிறந்தவுடன் குறைந்தபட்சம் 21 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் மருத்துவமனையிலேயே பிறப்புச் சான்றிதழை பெறமுடியும். எவ்வித கால தாமதமும் இன்றி இச்சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த சான்றிதழ் பெறுவதற்கு முன்பாக குழந்தையின் பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விபரம், பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட விபரங்களை சரியாக தெரிவிக்க வேண்டும். அதே போன்று இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதாரத்தினை முழுமையாக பேணிக் காக்க வேண்டும். மேலும், வெற்றிலை மற்றும் புகையிலை உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களை முழுமையாக தவிர்த்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.


தற்போது, சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறிவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போன்று, தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளின் பள்ளிப்படிப்பை முழுமையாக படிக்க வைத்து அவர்களை உயர்க்கல்வி பயில்வதற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிறப்புச் சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை மிக முக்கியமானதாகும், இத்தகைய சான்றிதழ்கள் மூலமாக அரசின் திட்டங்களை பெற முடியும். அதே போன்று பழங்குடியினர் அடையான அட்டை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும் எனத் தெரிவித்தார்.

இம்மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சியர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 11 பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களும், 28 பயனாளிகளுக்கு மின்னணு வாக்காளர் அடையான அட்டையினையும், 23 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும், 24 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையினையும், 11 பயனாளிகளுக்கு புதிய ஆதார் அட்டையினையும் மற்றும் 33 பயனாளிகளுக்கு ஆதார் அட்டை புதுப்பித்த ஆணையினையும் என 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்.


முன்னதாக, கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும், மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற சிறப்பு வகுப்பினையும் பார்வையிட்டார். இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆட்சியர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து,  கத்திரிமலை, மாதம்பட்டி மற்றும் மலையம்பட்டி ஆகிய பழங்குடியினர் பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாக ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு அதன் பயன்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இம்முகாமில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜ கோபால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அந்தியூர் வட்டாட்சியர் பெரியசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News